இந்த ஐபிஎல் தொடரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெல்லும் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் கோலாகலமாக நாளை தொடங்குகிறது. 10 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. நாளை தொடங்கும் 11வது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் முன்னாள் சாம்பியன் சென்னையும் மோதுகின்றன.

இந்த ஐபிஎல் தொடர், பஞ்சாப், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது. இந்த மூன்று அணிகளும் தான் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அதிலும், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள், கடந்த 10 சீசனில் பேசும்படியாக எதுவும் செய்ததில்லை.

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறியுள்ளனர். ஆனால், இந்த முறை இந்த அணிகள் புதிய உத்வேகத்துடன் களமிறங்குகின்றன. 

கொல்கத்தாவிற்கு இரண்டு ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த கேப்டன் கம்பீர், இந்த முறை டெல்லி அணியின் கேப்டனாக களம் காண்கிறார். இதுவரை ஐபிஎல்லில் சோபிக்காத டெல்லி அணிக்கு, கம்பீர் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பார் என அந்த அணியின் ரசிகர்களும் நிர்வாகிகளும் நம்புகின்றனர். 

டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த 10 தொடரிலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. 2 முறை அரையிறுதிச் சுற்றுக்கு மட்டுமே முன்னேறியது. இதுவரை ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடாத ஒரே அணி டெல்லி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடர் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், கெளதம் கம்பீர் தலைமையில் டேர் டெவில்ஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும். அணியின் முந்தைய நிலை குறித்து கவலையில்லை. தற்போது புதிய வீரர்களைக் கொண்ட குழு உள்ளது. வீரர்கள் அனைவரும் நன்றாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர். களத்தில் திட்டங்களை செயல்படுத்தினால் வெற்றி பெறலாம் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு சற்றே பின்னடைவு என்றாலும், இளம் படையை கொண்டுள்ள டெல்லி அணி இந்தமுறையாவது குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என பார்ப்போம்..

டெல்லி டேர்டெவில்ஸ் வீரர்கள்:

கம்பீர்(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், பிரித்வி ஷா, கிளென் மேக்ஸ்வெல், நமன் ஓஜா, கிறிஸ் மோரிஸ், ஜாசன் ராய், கோலின் முன்ரோ, டிரெண்ட் போல்ட், சந்தீப் லாமிச்சைன், ஜெயந்த் யாதவ், மஞ்ஜோத் கல்ரா, அங்கிட் சர்மா, அபிஷேக் சர்மா, சயன் கோஷ், நதீம், அமித் மிஸ்ரா