மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், கடைசி பந்தில் இலக்கை எட்டி டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது. ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பையும் டெல்லியும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நேற்று களம் கண்டன.

மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கம்பீர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் லிவைஸ் ஜோடி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. இருவரின் அதிரடியால் 9வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது மும்பை அணி.

48 ரன்களில் லிவைஸும் 53 ரன்களில் சூர்யகுமாரும் அவுட்டாகினர். அதன்பிறகு அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட இஷான் கிஷான், அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். அவருக்கு பிறகு இறங்கிய எந்த வீரரும் சரியாக விளையாடததால், 200 ரன்களை கடக்க வேண்டிய மும்பை அணி, 194 ரன்களை மட்டுமே எடுத்தது.

எனினும் 195 என்பது கடினமான இலக்குதான். 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். கம்பீர் அவுட்டாக, அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆடினார். ராய் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடியால் அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ரிஷப் பண்ட், மேக்ஸ்வெல் ஆகியோர் அவுட்டாகினர். அரைசதம் கடந்து அதிரடியாக ஆடிவந்த ராயின் விக்கெட்டை மும்பை வீரர்கள் வீழ்த்தவில்லை. கடைசி மூன்று ஓவர்களில் மும்பை அணி அருமையாக பந்துவீசியது. பும்ராவும் முஸ்தாபிஸரும் அற்புதமாக வீசினர்.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தாபிஸர் வீசிய முதல் பந்தில் பவுண்டரியும் இரண்டாவது பந்தில் சிக்ஸரும் அடித்து வெற்றியை உறுதி செய்தார். மீதமுள்ள 4 பந்துகளில் ஒரு ரன் தேவை. இப்படியான சூழலில், முஸ்தாபிஸர் வீசிய அடுத்த மூன்று பந்துகளை ஜேசன் ராயால் அடிக்க முடியவில்லை. தோல்வியை நெருங்கிய மும்பை அணிக்கு நம்பிக்கையை விதைத்தார் முஸ்தாபிஸர். ஆனால் கடைசி பந்தை தூக்கி அடித்தார் ராய். டெல்லி அணி வெற்றி பெற்றது. மும்பை அணி மற்றுமொரு போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

ஆரம்பம் முதலே களத்தில் நின்று அதிரடியாக ஆடி, 90 ரன்களை கடந்த வீரரை ஒரு ரன் அடிக்க திணறடித்தார் பவுலர் முஸ்தாபிஸர். மிக அருமையான கடைசி ஓவர் அது.

ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது மும்பை அணி.