அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர் கவுதம் காம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

டெல்லியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான ருத்ரா பில்ட்வெல் நிறுவனம், உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக கவுதம் காம்பீர் செயல்பட்டு வந்தார். 

இதில் 17 பேர் வீடுகளை வாங்குவதற்காக ரூ.1.98 கோடியை அந்த நிறுவனத்திடம் வழங்கியுள்ளனர். ஆனால் வீடுகள் குறித்த நேரத்தில் கட்டப்படவில்லை என்றும் முதலீட்டாளர்களை அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டது என்றும் முதலீட்டாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக டெல்லி சாஹேத் மாநகர குற்றவியல் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். 

அந்த மனுவில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு, நிறுவனத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கவுதம் காம்பீருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி கவுதம் காம்பீருக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது. நேற்றும்(புதன்கிழமை - 19ம் தேதி) காம்பீர் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலம் விளக்கமளித்ததால், பத்தாயிரம் ரூபாயில் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

தனது கிரிக்கெட் வாழ்விலும் சொந்த வாழ்விலும் மிகவும் நேர்மையான மனிதரான கவுதம் காம்பீருக்கு இது ஒரு விரும்பத்தகாத நிகழ்வுதான். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை தேடிக்கொடுத்த மிகச்சிறந்த வீரரான காம்பீர், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.