இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், நேற்று அவரது 35வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற வீரர்களால் எளிதில் முறியடிக்க முடியாத இரண்டு சாதனைகளை பார்ப்போம். 

தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவைக் கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டிவில்லியர்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸின் கேப்டன்சியில், 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா தான் வெல்லும் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியது. அந்த தோல்வியை அடுத்து அப்போதைய கேப்டன் டிவில்லியர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார். 

மிகச்சிறந்த அணியாக இருந்தும் இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றதில்லை. டிவில்லியர்ஸின் தலைமையில் 2015ல் கோப்பையை வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கடந்த முறை அது முடியாத நிலையில், 2019 உலக கோப்பையில் ஆடி டிவில்லியர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு திடீரென ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ். இவரது திடீர் அறிவிப்பு தென்னாப்பிரிக்க அணிக்கே அதிர்ச்சியாக இருந்தது.

தனது அதிரடியான பேட்டிங்கால் உலகம் முழுதும் ரசிகர்களை பெற்றுள்ள டிவில்லியர்ஸுக்கு இந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். எத்தனையோ வீரர்கள் எத்தனையோ சாதனைகளை தன்னகத்தே வைத்திருந்தாலும், எந்த வீரராலும் இனிமேல் எளிதாக முறியடிக்க முடியாத சாதனையை டிவில்லியர்ஸ் வைத்துள்ளார்.

அது என்னவென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் மற்றும் அதிவேக சதம் தான் அந்த சாதனை. 2014ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த அந்த போட்டியில் டிவில்லியர்ஸ் அடித்தது முரட்டுத்தனமான காட்டடி. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஆம்லா மற்றும் ரூசோ முதல் விக்கெட்டுக்கு 247 ரன்களை சேர்த்தனர். 39வது ஓவரில்தான் முதல் விக்கெட்டே விழுந்தது. 

அதன்பிறகு களத்திற்கு வந்த டிவில்லியர்ஸ், வாணவேடிக்கை நிகழ்த்தினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்த டிவில்லியர்ஸ், 31 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். மொத்தமாக 44 பந்துகளை எதிர்கொண்டு 16 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 149 ரன்களை குவித்தார் டிவில்லியர்ஸ். 16 பந்துகளில் இவர் அடித்த அரைசதம் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் அதிவேக அரைசதம். அதேபோல 31 பந்துகளில் இவர் அடித்த சதம்தான் ஒருநாள் கிரிக்கெட்டின் அதிவேக சதம்.  

டிவில்லியர்ஸின் இந்த சாதனைகளை முறியடிப்பது மிகவும் கடினம். அதிவேக அரைசதம் என்பது முறியடிக்கப்பட்டாலும் கூட, அதிவேக சத சாதனையை முறியடிப்பது எளிதல்ல.