இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், நேற்று அவரது 35வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர் யார் என்று பார்ப்போம். 

தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவைக் கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டிவில்லியர்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸின் கேப்டன்சியில், 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா தான் வெல்லும் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியது. அப்போது கேப்டன் டிவில்லியர்ஸ் மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரரான டிவில்லியர்ஸ், அர்ப்பணிப்புடன் ஆடக்கூடியவர். உலகம் முழுதும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் டிவில்லியர்ஸ், விராட் கோலியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக திகழ்கின்றனர். நேற்று டிவில்லியர்ஸ் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிளக்ஸிற்கு பெங்களூரு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். 

விராட் கோலியின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவருக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தான். சேவாக்கின் அதிரடியான பேட்டிங்கிற்கு டிவில்லியர்ஸ் மிகத்தீவிர ரசிகர். இதை அவரே தெரிவித்திருக்கிறார். அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட சேவாக், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் ஆடுபவர் என்று புகழ்ந்துள்ளார். 

சேவாக் தனது அதிரடியால் எதிரணிகளை தெறிக்கவிட்டவர். இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடி எதிரணிகளை அச்சுறுத்தும் வீரர் சேவாக். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களும் அடித்த பெருமைக்குரியவர்.