ரஷ்யா உக்ரைன் மீது போர்த்தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், உக்ரைனில் மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் மருத்துவரிடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வழங்கியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.
உக்ரைன் மீது ரஷ்யா போரில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் 27வது நாளாக நீடித்துவருகிறது. சுமார் ஒரு மாதமாக நடந்துவரும் இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என எதுவுமே தப்பவில்லை.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்திருப்பதுடன், அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்படுகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில், மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் இரினா என்ற பெண் மருத்துவரிடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை வழங்கியுள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள டேவிட் பெக்காம், இன்று நான் எனது சமூக வலைதளங்கள் கணக்கை மருத்துவர் இரினாவிடம் வழங்கியிருக்கிறேன். கார்கிவ் நகரில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையளித்து உதவிவருகிறார் மருத்துவர் இரினா. உக்ரைனில் இரினா மற்றும் அவரைப்போன்ற மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் சேவையை அனைவரும் எனது பதிவின் மூலம் தெரிந்துகொள்வார்கள் என்பதற்காகவே பதிவிடுகிறேன். உங்களால் முடிந்த உதவிகளை யுனிசெஃப் அல்லது இரினா மாதிரியான மருத்துவர்களுக்கு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார் டேவிட் பெக்காம்.
