csk physical trainer ramji praised dhoni for his fitness

36 வயதானாலும் ஃபிட்னஸில் இளம் வீரர்களுக்கு தோனி முன்னுதாரணமாக திகழ்வதாக சிஎஸ்கே அணியின் உடற்பயிற்சியாளர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

35 வயதை கடந்த கிரிக்கெட் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றால், உடனே அவர்களது வயதை சுட்டிக்காட்டி விமர்சிப்பது வழக்கம்தான். தோனியும் சரியாக ஆடாத தருணங்களில் அதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவற்றிற்கெல்லாம் தனது பேட்டிங்கின் மூலமும் களத்தில் தனது செயல்பாடுகளின் மூலமும் பதிலடி கொடுத்துவிடுவார் தோனி. 

ஃபிட்னஸை பொறுத்தவரை தோனி எப்போதுமே அனைத்து வீரர்களுக்கும் மாஸ்டர் தான். 36 வயதாகிவிட்டபோதிலும் இளம் வீரர்களுக்கு நிகராக ஓடுவார் தோனி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவுக்கு நிகராக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

அதேபோல ஐபிஎல் இறுதி போட்டியில் வென்றதற்கு பிறகு, தோனிக்கும் பிராவோவுக்கும் இடையே ரன் ஓடும் போட்டி நடைபெற்றது. மூன்று ரன்கள் ஓடும் அந்த போட்டியில் பிராவோவிற்கு முன்னதாக கிரீஸை தொட்டு, ஓட்டத்தில் தோனி தான் சிறந்தவர் என்பதை நிரூபித்தார்.

இந்நிலையில், தோனியின் ஃபிட்னஸ் குறித்து பேசிய சென்னை அணியின் உடற்பயிற்சியாளர் ராம்ஜி ஸ்ரீனிவாசன், மற்ற வீரர்களை விட தோனி எப்போதுமே ஃபிட்னஸில் சிறப்பாக இருக்கிறார். மற்ற வீரர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார். 36 வயதாகிவிட்டது. எனினும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். ஆண்டு முழுவதும் விளையாடவில்லை என்றாலும் கூட உடலை சரியாக பராமரிக்கிறார். இளம் வீரர்கள் தோனியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.