ஐபிஎல் 2025 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. 2025 ஐபிஎல் சீசன் மார்ச் 21ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் 21ம் தேதி முதல் நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே தங்களுக்கு பிடித்தமான அணிகளுக்காக சமூகவலைத்தளங்களில் மோதலைத் தொடங்கி விட்டனர். இந்த முறை கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன.
ஐபிஎல் 2025 தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று சிஎஸ்கே. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே, இந்த முறையும் கோப்பையை தட்டித் தூக்க வேண்டும் என ரசிகர்கள் எதிபார்க்கின்றனர். அது மட்டுமின்றி சிஎஸ்கேவின் அடையாளம் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என்பதால் சிஎஸ்கே மீதான எதிபார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 தொடரில் புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் மெயின் ஸ்பான்சராக யூரோகிரிப் டயர்ஸ் நிறுவனமும், இரண்டாம் கட்ட ஸ்பான்சராக எதியாட் ஏர்வேஸ் விமான நிறுவனமும் இருந்தது. இந்த சீசனில் எதியாட் ஏர்வேஸ் சிஎஸ்கேவின் முழு நேர ஸ்பான்சராக உருவெடுத்துள்ளது.
சிஎஸ்கேவின் டிரேட் மார்க்கான மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும் புதிய ஜெர்சியில் முன்பக்கத்தில் எதியாட் ஏர்வேஸ் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. மேலே ஒருபக்கம் GULF என்ற ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும், மறுபக்கம் சிஎஸ்கே லோகோவும் இடம்பெற்றுள்ளது. ஜெர்சியின் பின்னால் டாப்பில் fedex என ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும், #whistlepodu என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய ஜெர்சியில் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் களமிறங்குவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை 2025 ஐபிஎல் தொடரை தட்டித்தூக்கும் வகையில் பல்வேறு புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. அதில் மிக முக்கியமானவர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின். ஆரம்ப காலத்தில் சிஎஸ்கே அணியில் விளையாடிய அஸ்வின், இப்போது மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து விளையாட இருக்கிறார்.
அனுபவம் வாய்ந்த வீரரான அஸ்வின், 212 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டாக அவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
