சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த ஏனைய ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டதால், அந்த போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பணத்தை வரும் 20ம் தேதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. உரிமைக்காக ஒன்றிணைந்துள்ள தமிழர்களை பிளவுபடுத்தும் வகையிலான ஐபிஎல் போட்டிகள், சென்னையில் நடைபெறக்கூடாது என்ற எதிர்ப்பு குரல்கள் வலுத்தன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 10ம் தேதி சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நடப்பதற்கு முன்பாக போராட்டங்கள் வலுத்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடத்தப்பட்டது. 

சென்னையில் இன்னும் 6 போட்டிகள் நடத்த வேண்டும் என்பதால், அப்போதும் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே பதற்றமான சூழலை தவிர்க்கும் வண்ணம், சென்னையில் நடைபெற இருந்த ஏனைய 6 போட்டிகளும் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே அந்த போட்டிகளைக் காண டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 20ம் தேதிக்கு பிறகு டிக்கெட் பணம் திரும்ப தரப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.