ஐபிஎல் 11வது சீசன் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்டதால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களம் காண்கின்றன. அதனால் தோனியின் ரசிகர்களும் சென்னை அணியின் ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் போட்டியே நடப்பு சாம்பியன் மும்பைக்கும் முன்னாள் சாம்பியன் சென்னைக்கும் நடப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மொத்தம் 14 அணிகள். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 போட்டிகள் விளையாடும். அந்த வகையில் ஒரு அணி 14 போட்டிகளில் விளையாடும். அவற்றில் 7 போட்டிகள் உள்ளூர் மைதானத்தில் நடைபெறும்.

சென்னை அணிக்கு முதல் போட்டி மும்பை அணிக்கு எதிரானது என்றாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி கொல்கத்தா அணிக்கு எதிரானது. ஏப்ரல் 10ம் தேதி அந்த போட்டி நடைபெறுகிறது.

அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. காலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1300 ஆகவும் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட் விலையை அதிகமாக நினைக்கும் ரசிகர்கள் சிலர், ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி சம்பாதிக்கின்றனர் என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர் ஒருவர், அடுத்தவன் ஆசையை பணம் ஆக்கி லாபம் பன்றது என்பதை #chennaiIPL பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

ரசிகரின் விமர்சனத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல், சிஸ்கே அணி நிர்வாகம், அதற்கு பதிலளித்துள்ளது. சென்னை அணி டுவிட்டரில் விளக்கமளித்துள்ளது.

அதாவது, ஜிஎஸ்டி மற்றும் உள்ளூர் வரியை சேர்த்து வசூலிப்பதால், கட்டணம் அதிகமாகிறது. மற்ற ஐபிஎல் மையங்கள் ஜிஎஸ்டி மட்டும்தான் வசூலிக்கிறது. இங்கு நாங்கள் உள்ளூர் வரியையும் செலுத்தவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

எதன் அடிப்படையில் ரூ. 1300 என்கிற மற்றொரு ரசிகரின் கேள்விக்கும் சிஎஸ்கே பதிலளித்துள்ளது. அதில், 

அடிப்படை விலை - ரூ. 762 + உள்ளூர் கேளிக்கை வரி ரூ. 254 + ஜிஎஸ்டி ரூ. 284 = ரூ. 1300 என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.