Court removes lifelong ban on 28 Russian soldiers

ஊக்கமருந்து பயன்படுத்தியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட 43 ரஷிய வீரர்களில், 28 பேர் மீதான தடையை நீக்கி விளையாட்டுகளுக்கான நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

2014-ஆம் ஆண்டு ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது ரஷிய அரசு அமைப்புகளின் ஆதரவுடன் அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் தொடர்ச்சியாக இம்மாதம் பியோங்சாங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அணிகள் பிரிவில் ரஷியா பங்கேற்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. எனினும், 169 ரஷியர்கள் பொதுவான வீரர்களாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, தடை உத்தரவுக்கு எதிராக 42 ரஷியர்கள் தரப்பில் நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, மேற்கூறிய 28 பேருடன் மேலும் 11 ரஷியர்கள் மீதான வாழ்நாள் தடையையும் நீக்கி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர்கள் பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.

விளையாட்டுகளுக்கான நடுவர் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில், 'சோச்சி ஒலிம்பிக்கில் ரஷிய அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட 28 பேர் ஆதாயம் அடைந்ததற்கான போதிய ஆதாரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சமர்ப்பிக்கவில்லை' என்று கூறப்பட்டிருந்தது.

இதன் மூலமாக, எதிர்வரும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மேலும் சில ரஷிய வீரர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.