இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில், மிஸ்டர்  கூல் என்று அன்போடு அழைக்கப்படும், டோனி , சக வீரரான  மனிஷ் பாண்டேவை கழுவி, கழுவி ஊற்றியது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. கோபமே வராத டோனியின் இந்த கொந்தளிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் 5-1 என வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து நடைப் பெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்நிலையில் 2வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் மனிஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.189 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பரிக்க அணி 18.4 ஓவர்களிலேயே வெற்றியை தனதாக்கி கொண்டது.. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, கடைசி ஓவரில் தோனி இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்தார்.  ஆனால், மனிஷ் பாண்டே ஒரு ரன் மட்டுமே ஓடினார். இதனால் கோபமடைந்த தோனி மனிஷ் பாண்டேவை திட்டித் தீர்த்தார்.

முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கோபம் கொப்பளிக்க அவர் திட்டியதை தொலைக்காட்சிகளில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து  வீசப்பட்ட பந்தை கோபத்தில் தோனி சிக்ஸர் அடித்து மிரட்டினார்..

கேப்டன் கூல் என்றழைக்கப்படும் தோனி, மிக மோசமான சூழலிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர் என்று அனைவராலும் பாராட்டப்படும் நிலையில், தனது நாட்டு சகவீரரிடம் கோபப்பட்டு பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.