இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவை சக வீரர்களிடம் சொல்லுவதற்கான தைரியத்தை பெற்றது எப்படி என குக் விளக்கியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுள்ளது. ஆனால் அந்த அணியின் சீனியர் வீரரான அலெஸ்டர் குக், இந்த தொடரில் சோபிக்கவில்லை. ஒரு இன்னிங்ஸில் கூட அவர் சரியாக ஆடவில்லை. 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஆடி, 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அண்மைக்காலமாகவே குக் சரியாக ஆடவில்லை. ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த குக், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

33 வயதான அலெஸ்டர் குக், கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டிலுமே சிறந்த வீரராக திகழ்ந்த குக், கடந்த 2014ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

இங்கிலாந்து அணிக்காக 160 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,254 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட், குமார் சங்ககரா ஆகியோருக்கு அடுத்தபடியாக 6வது இடத்தில் உள்ளார் குக்.

இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ள குக், அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாததால், ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். நாளை இந்தியாவுக்கு எதிராக தொடங்க இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் ஆடிய குக், இந்த முடிவை வீரர்களிடம் தெரிவித்தபோது அந்த இடமே உணர்ச்சிமயமானது. சக வீரர்களிடம் ஓய்வு முடிவை அறிவித்தது தொடர்பாக பேசியுள்ள குக், சக வீரர்களிடம் ஓய்வு முடிவை தெரிவிக்கும் முன்பாக இரண்டு பீர்கள் குடித்தேன். அதன்பிறகுதான் அவர்களிடம் எனது ஓய்வு முடிவை சொல்ல முடிந்தது. அப்படியும் நான் அழுதேன். ஒருவேளை பீர் குடிக்காமல் சொல்லியிருந்தால், மேலும் கூடுதலாக அழுது இருந்திருப்பேன் என குக் தெரிவித்துள்ளார்.