குக் கேப்டனாக இருந்த சமயத்தில் கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 0-5 என இழந்தது. அந்த தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் ஓரளவிற்காவது ஆடி ரன்களை குவித்தவர் கெவின் பீட்டர்சன். 

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். மிகச்சிறந்த வீரர் பீட்டர்சன். அப்படியிருக்கையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த தருணத்தில் அந்த தோல்வியை காரணம் காட்டி பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பீட்டர்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அப்போதைய கேப்டன் குக் தான் காரணம் என பேசப்பட்டது. 

ஒருவேளை குக் காரணமில்லை என்றாலும் பீட்டர்சனுக்கு ஆதரவாகவோ அல்லது பீட்டர்சனை மீண்டும் அணியில் சேர்க்கும் முயற்சியையோ குக் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து. 

குக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நிலையில், பீட்டர்சனின் நீக்கத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு அதுதொடர்பாக விளக்கமும் அளித்தார். பீட்டர்சனை ஓராண்டிற்கு அணியிலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டு மீண்டும் சேர்க்கலாம் என தான் கூறியதாகவும் ஆனால் அணி நிர்வாகம் கடினமான முடிவை எடுத்ததாகவும் குக் விளக்கினார். மேலும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் சிறந்த நண்பர்களான தாங்கள் இருவரும் 4 ஆண்டுகளாக பேசிக்கொள்ளவில்லை எனவும் இந்த விவகாரத்தில் காலம்தான் மருந்து எனவும் மனம்வருந்தி பேசியிருந்தார். 

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக தனது கடைசி இன்னிங்ஸை ஆடிய குக், சதமடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் சதமடித்த குக், கடைசி போட்டியிலும் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

இதையடுத்து நான்கு ஆண்டுகளாக குக்குடன் பேசாமல் மனவருத்தத்தில் இருந்த பீட்டர்சன், குக்கின் சதம் குறித்து டுவீட் செய்துள்ளார். இதன்மூலம் அவர்களுக்கு இடையேயான பனிப்போர் முடிந்துவிட்டதாகவே இதை பார்க்க முடிகிறது.

பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவர் என்றே கூறலாம். விரைவில் இருவரையும் இணைத்தே பார்க்கக்கூடிய சூழல் உருவாகும்.