Commonwealth Update Sushilkumar won gold for 3rd time ... Rahul won gold

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவின் சுஷில்குமார் மூன்றாவது முறையாக தங்கமும், ராகுல் அவாரே முதல் தங்கமும் வென்று அசத்தியுள்ளனர். 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

அதன்படி, 74 கிலோ எடை பிரிவில் நடப்புச் சாம்பியனும், 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுஷில்குமார் 1 நிமிடம் 20 வினாடிகளில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ் போதாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 

இது காமன்வெல்த் போட்டிகளில் சுஷில்குமார் பெறும் 3-வது தங்கமாகும். முன்னதாக அவர் கனடாவின் பெல்புளோர், பாகிஸ்தானின் முகமது ஆசாத்தை வீழ்த்தினார்.

முதன்முதலாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ள அறிமுக வீரர் ராகுல் அவாரே 57 கிலோ எடைப்பிரிவில் 15-7 என்ற கணக்கில் கனடாவின் ஸ்டீவன் டகஹாஷியை வீழ்த்தி தங்கம் வென்றார்.

மல்யுத்தப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும். முன்னதாக அவாரே இங்கிலாந்தின் ஜார்ஜ் ராம், ஆஸ்திரேலியாவின் தாமஸ், பாகிஸ்தானின் முகமது பிலால் ஆகியோரை தோல்வியுறச் செய்தார்.