காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கமும், மெளசம் கத்ரி வெள்ளியும், பூஜா தன்டா வெள்ளியும், திவ்யா கக்ரான் வெண்கலமும் வென்றனர்.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் புனியா, நியூஸிலாந்தின் பிராம் ரிச்சர்ட்ஸ், நைஜீரியாவின் அமாஸ் டேனியல், கனடாவின் வின்சென்ட் டி மரினிஸ் ஆகியோரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் வேல்ஸின் கேன் சாரிக்கை சுமார் ஒரு நிமிடத்தில் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற மெளசம் கத்ரி, 97 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் மார்டின் எராஸ்மஸிடம் தோற்று 2-ஆம் இடம் பிடித்தார்.

மகளிருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா, இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான நைஜீரியாவின் ஒடுனயோ அடெகுரோயேவிடம் வீழ்ந்து வெள்ளி வென்றார். 

அதேபோன்று 68 கிலோ பிரிவில் போட்டியிட்ட திவ்யா கக்ரான், அரையிறுதியில் நைஜீரியாவின் பிளெஸ்ஸிங் ஒபோருடுடுவிடம் தோற்றார். பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் வங்கதேசத்தின் ஷெரின் சுல்தானாவை வீழ்த்தினார்.