காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா - மெளமா தாஸ் ஜோடி வெள்ளிப் பதக்கத்தை முதல் முறையாக வென்று அசத்தினர். 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றில் மனிகா  -  மெளமா ஜோடி, 5-11, 4-11, 5-11 என்ற செட்களில் சீனாவின் ஃபெங் டியான்வெய் - யு மெங்யு இணையிடம் வீழ்ந்தது.

வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி - பூஜா சஹஸ்ரபுத்தே இணை 15-13, 11-7, 8-11, 11-7 என்ற செட்களில் மலேசியாவின் யிங் ஹோ - காரென் லைன் இணையிடம் தோற்றது. 

ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சரத் கமல் - சத்தியன் இணை, இங்கிலாந்தின் பால் டிரிங்க்ஹால் - லியாம் பிட்ச்ஃபோர்டு இணையை எதிர்கொள்கிறது. 

மற்றொரு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் ஹர்மீத் தேசாய் - சனில் ஷெட்டி ஜோடி வெண்கலத்துக்கான போட்டியில் இன்று மோதுகிறது.

அதேபோன்று, கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல் - மெளமா தாஸ், சத்தியன் - மனிகா பத்ரா இணைகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.