21-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று வான வேடிக்கையோடு நிறைவடைந்தது. தொடக்கத்தில் பி.வி.சிந்து தேசியக் கொடியேந்தி அணியை வழிநடத்தியதுபோல நிறைவு விழாவில் மேரி கோம் கொடியை ஏந்திச் சென்றார்.

கோல்ட்கோஸ்டில் நடைபெற்று வந்த 21-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று நிறைவடைந்தது. இதன் தொடக்க விழா அணிவகுப்பில் பி.வி.சிந்து தேசியக் கொடியேந்தி அணியை வழிநடத்திச் சென்றார்.

21-வது காமன்வெல்த் போட்டிகளில் 19 விளையாட்டுகளில் பதக்கங்கள் வெல்வதற்காக பல்வேறு பிரிவுகளில் 12 நாள்களாக போட்டிகள் நடைபெற்றன. 

இந்தப் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும், இந்தியா மூன்றாம் இடத்தையும் பெற்றன. 

காரரா விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கோர் மத்தியில் நடந்த நிறைவு விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக் கொடியேந்தி அணியை வழிநடத்திச் சென்றார். 

பல்வேறு வாணவேடிக்கைகள், சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இளவரசர் எட்வர்ட் போட்டிகளைநிறைவு செய்து வைத்தார். காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு கொடி 2022-இல் போட்டிகள் நடக்க உள்ள பர்மிங்ஹாம் நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தலைவர் லூயிஸ் மார்ட்டின், "போட்டிகளில் வீரர்களின் திறமை சிறப்பானதாக இருந்தது. உலக சாதனைகளையும் படைத்தனர். இளம் வீரர்களும் பல்வேறு சாதனைகளை முறியடித்தனர். காமன்வெல்த் போட்டிகளின் எதிர்காலம் செம்மையாகவே காணப்படுகிறது" என்றார்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் இனிமையான நினைவுகளுடன் கோல்ட்கோஸ்டில் இருந்து விடை பெற்றனர்.