பர்மிங்காமில் காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி, பி.வி.சிந்து மற்றும் மன்ப்ரீத் சிங் தலைமையில் அணிவகுத்தனர். 

1930ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் காமன்வெல்த் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்கிறது. 22வது காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கால் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

 72 நாடுகளிலிருந்து 5054 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இந்தியாவிலிருந்து 215 வீரர்கள், வீராங்கனைகள் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் பங்கேற்று ஆடவுள்ளனர்.

இதையும் படிங்க - CWG 2022: எனக்கு அதிகமான மன உளைச்சலை கொடுக்கின்றனர்! இந்த அரசியலை எல்லாம் சமாளித்து பதக்கம் வெல்வேன் - லவ்லினா

நேற்று இரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு பர்மிங்காமில் காமன்வெல்த் போட்டிகளுக்கான கோலாகல தொடக்க விழா தொடங்கியது. தொடக்க விழாவில் அனைத்து நாடுகளின் அணிகளும் அணிவகுத்தன.

இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளிலிருந்து அவர் விலகியதால், ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 பதக்கம் வென்று கொடுத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்சென்றார்.

பி.வி.சிந்து மற்றும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோரின் தலைமையில் 215 வீரர்கள், வீராங்கனைகளை கொண்ட இந்திய அணி அணிவகுத்து சென்றது. 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் பர்மிங்காம் அலெக்ஸாண்டர் ஸ்டேடியத்தில் காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க பிரம்மாண்டமாக நடந்தது. 

இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தடகளம், பேட்மிண்டன், கிரிக்கெட் (மகளிர் டி20), ஹாக்கி, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவுல்ஸ், பாக்ஸிங், மல்யுத்தம், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரயத்லான், பளு தூக்குதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள் 2022: முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகள், எந்தெந்த வீரர்கள் ஆடுகின்றனர்? முழு விவரம்

பி.வி.சிந்து (பேட்மிண்டன்), பளுதூக்குதல் (மீராபாய் சானு), பஜ்ரங் புனியா (மல்யுத்தம்), லவ்லினா (பாக்ஸிங்), ரவி தாஹியா(மல்யுத்தம்) ஆகிய வீரர்கள், வீராங்கனைகளும், ஹாக்கி மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளும் வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.