காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இந்தியா பாக்ஸர் லவ்லினா பார்கொஹைன், தனக்கு அதிகமான மன உளைச்சல் தரப்படுவதாகவும், இந்த அரசியலை எல்லாம் சமாளித்து பதக்கம் வெல்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பர்மிங்காமில் உள்ள காமன்வெல்த் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.
காமன்வெல்த்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக பங்கேற்க முடியவில்லை. எனவே கண்டிப்பாக கிடைக்க வேண்டிய ஒரு பதக்கம் தடைபட்டது.
இந்நிலையில், பாக்ஸிங் வீராங்கனை லவ்லினா பார்கொஹைன் தனக்கு மன உளைச்சல் தரப்படுவதாகவும், இந்த அரசியலை எல்லாம் சமாளித்து கண்டிப்பாக பதக்கத்தை வெல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த லவ்லினாவின் டுவிட்டர் பதிவில், எனது பயிற்சியாளர்களை நீக்கி, எனக்கு தொடர்ச்சியாக மன உளைச்சலை ஏற்படுத்திவருகின்றனர். நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உதவிய எனது பயிற்சியாளர்களை நீக்கிவிட்டனர். அது எனது பயிற்சியை பாதித்துள்ளது. எனது பயிற்சியாளரும் துரோணாச்சாரியர் விருது வென்றவருமான சந்தியா குருங் ஜியை காமன்வெல்த் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை. மற்றொரு பயிற்சியாளரை இந்தியாவிற்கே அனுப்பிவிட்டனர். ஆனால் இந்த அரசியலை எல்லாம் சமாளித்து கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என்று லவ்லினா தெரிவித்துள்ளார்.
