ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆராவாரத்துடன் தொடங்கியது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. 

பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.  போட்டிகளை நடத்துவதற்கான நகரங்களையும் காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு தேர்வு செய்கிறது. 

53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். இதுவரை 7 நாடுகளைச் சேர்ந்த 18 நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன. ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டவை தலா 4 முறை ஏற்கெனவே இப்போட்டிகளை நடத்தியுள்ளன.

தற்போது 5-வது முறையாக கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் தொடக்கம்: 11 நாள்கள் நடைபெறும் இப்போட்டிகளில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் 23 விளையாட்டுப் பிரிவுகளில் 275 தங்கப் பதக்கங்களை கைப்பற்ற போட்டியிடுகின்றனர். 220 வீரர், வீராங்கனைகளைக் கொண்ட இந்திய குழுவை தேசியக் கொடியை ஏந்தி பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தலைமை தாங்கி வழிநடத்தினார். 

இதில் இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமார், இலண்டன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மேரி கோம், சாய்னா நேவால், ககன் நரங் ஆகியோரும் அடங்குவர். முதல் தங்கப்பதக்கத்துக்காக பெண்கள் டிரையத்லான் போட்டி இன்று நடக்கிறது.
ஐந்து முறை காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் சுசீ ஓ நீல் ராணியின் கோலினை கொண்டு வந்தார். காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புத் தலைவர் லூயிஸ் மார்ட்டின் கூட்டமைப்பின் நோக்கம் குறித்து விவரித்தார். 

போட்டி அமைப்புக் குழுத் தலைவர் பீட்டர் பீட்டி வரவேற்றார். 6 தடகள வீரர்கள் காமன்வெல்த் கூட்டமைப்பு கொடியை ஏந்திச் சென்றனர்.

ஆஸ்திரேலிய பாடகர் கேத்தி நூனன் தனது பாடல் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார். ஆங்கில ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் சீப் திரில்ஸ் என்ற இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் பல்வேறு நாடுகளின் அமைப்பு, கலாசாரம், கோல்ட்கோஸ்ட் வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.