செஸ் ஓலிம்பியாட்: தொடர் வெற்றிகள்.. சர்வதேச வீரர்களை தெறிக்கவிடும் திறமை..! யார் இந்த குகேஷ்..?
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து, சர்வதேச ஜாம்பவான்களை தெறிக்கவிட்டுவருகிறார், தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ். இந்த குகேஷ் யார் என்று பார்ப்போம்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அசத்துகின்றனர். இளம் கிராண்ட்மாஸ்டரும், சர்வதேச சாம்பியனும் உலகின் நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலகையே தன் பக்கம் கவர்ந்தவருமான பிரக்ஞானந்தா கூட இந்த செஸ் ஒலிம்பியாடில் டிரா, தோல்வி ஆகியவற்றை சந்தித்தார்.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் மற்றும் நந்திதா அசத்திவருகின்றனர். ஓபன் பிரிவில் இந்தியா பி அணியில் ஆடிவரும் குகேஷ் மிக அபாரமாக ஆடி, இதுவரை ஆடிய 6 சுற்றுகளிலும் அபார வெற்றிகளை பெற்றுள்ளார்.
6வது சுற்றில் உலகின் வலுவான செஸ் அணிகளில் ஒன்றான ஸ்பெய்ன் அணியை சேர்ந்த அலெக்ஸி ஷிரோவை எதிர்கொண்டு ஆடிய குகேஷ், சவாலான இந்த போட்டியில் அபாரமாக காய்களை நகர்த்தி ஷிரோவை மடக்கி வெற்றி பெற்றார். குகேஷின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் விளைவாக இந்தியா பி அணி தொடர் வெற்றிகளை குவித்துவருகிறது. ஸ்பெய்னை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பி அணி வெற்றி பெற்றது.
தொடர் வெற்றிகள் மற்றும் சர்வதேச ஜாம்பவான்களுக்கு எதிரான வெற்றி ஆகியவற்றின் மூலம் செஸ் உலகை மிரட்டிவரும் தமிழகத்தை சேர்ந்த இந்த குகேஷின் பின்னணியை பார்ப்போம்.
2006ம் ஆண்டு சென்னையில் பிறந்த குகேஷ், 9 வயது மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி ஏகப்பட்ட சாதனைகளை புரிந்தவர். 9 வயதுக்குட்பட்ட ஆசியன் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப், 2019ம் ஆண்டு நடந்த உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் ஆகிய சாம்பியன் பட்டங்களை வென்றார். 12 வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார்.
உலக யூத் சாம்பியன்ஷிப்பில் 5 முறை தங்க பதக்கம் வென்ற குகேஷ், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு ரேட்டிங்கில் 16 வயதிலேயே 2700 புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்தார். 16 வயதிலேயே FIDE ரேட்டிங்கில் 2700 புள்ளிகளுக்கு மேல் குவித்த வெகுசில வீரர்களில் குகேஷும் ஒருவர்.
சர்வதேச செஸ் தரவரிசையில் 38வது இடத்தில் உள்ளார் குகேஷ். செஸ் என்றாலே தமிழகத்தில் அறியப்படும் நபராக இருக்கும் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவே சர்வதேச தரவரிசையில் 90வது இடத்தில் தான் உள்ளார். ஆனால் குகேஷ் 38வது இடத்தில் உள்ளார்.