chennai supre kings got murali vijay for two crores
11வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சர்வதேச அளவில் முக்கியமான மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய பல வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இந்த முறை புறக்கணிக்கப்பட்டார். கிறிஸ் கெய்லை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
அதேபோல, மலிங்கா, ஜோ ரூட், ஆம்லா, மார்டின் கப்டில், ஷான் மார்ஷ், டேல் ஸ்டெயின், இயன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், சிம்மன்ஸ், ஹென்றிகேஸ், கோரி ஆண்டர்சன், முரளி விஜய், ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோரையும் எந்த அணியும் எடுக்கவில்லை.
உலகின் முன்னணி வெளிநாட்டு வீரர்கள் நிராகரிக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்திய வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஜெய்தேவ் உனாட்கட் 11.5 கோடி ரூபாய்க்கும், லோகேஷ் ராகுல் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் தலா 11 கோடி ரூபாய்க்கும் சஞ்சு சாம்சன் 8 கோடி ரூபாய்க்கும் அஷ்வின் 7.6 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
சென்னை அணியின் செல்லப்பிள்ளையான அஷ்வினை சென்னை அணி எடுக்காத நிலையில், முரளி விஜயும் புறக்கணிக்கப்பட்டதால் சென்னை ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், முதற்கட்ட ஏலத்தில் நிராகரிக்கப்பட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தில் விடப்பட்டனர். அப்போது, தமிழக வீரர் முரளி விஜயை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி எடுத்தது.
அப்போதும் கூட, கிறிஸ் கெய்ல், ஷான் மார்ஷ், கோரி ஆண்டர்சன், ஸ்டெயின் ஆகிய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
