chennai super kings is back

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் களமிறங்குகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 

6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மஞ்சள் நிற உடையில் மீண்டும் களமிறங்குவார் என சீனிவாசன் தெரிவித்தார்.