கடந்த ஐபிஎல் சீசன்களிலும் தோனியின் கேப்டன்சியின் கீழும் தோனியுடனும் ஆடிய அஸ்வின், இந்தமுறை தோனிக்கு எதிராக, அதுவும் கேப்டனாக ஆடவுள்ளார்.

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல், 2015ம் ஆண்டு வரை சென்னை அணியில் தோனியின் கேப்டன்சியில் அஸ்வின் ஆடினார். 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டும் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால், அந்த இரண்டு ஆண்டுகளும் தோனி இடம்பெற்றிருந்த புனே அணியில்தான் அஸ்வினும் ஆடினார்.

இந்த ஆண்டு மீண்டும் சென்னை அணி களமிறங்கியுள்ளது. ஆனால், அஸ்வினை சென்னை அணி தக்கவைக்கவில்லை. மாறாக அவரை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி, அஸ்வினையே கேப்டனாகவும் ஆக்கியது. அவரும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறார்.

இன்று சென்னை-பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி மொஹாலியில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடிய அஸ்வின், தோனியை எதிர்த்து கேப்டனாக ஆட இருக்கிறார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.