2011-க்குப் பிறகு சென்னை ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை ரோஹன் - ஜீவன் ஜோடிப் பெற்றுள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சக நாட்டவர்களான பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடியைத் தோற்கடித்தது.

இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா வென்ற 15-ஆவது சாம்பியன் பட்டம் இது. அதேநேரத்தில் அவர் சென்னை ஓபனில் முதல்முறையாக வாகை சூடியுள்ளார்.

அதேபோல், தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் வென்ற முதல் ஏடிபி பட்டம் இது.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபனில் சோம்தேவுடன் இணைந்து அரையிறுதி வரை முன்னேறியிருந்ததே ஜீவனின் அதிகபட்ச வெற்றியாக இருந்தது.

2011-க்குப் பிறகு சென்னை ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் ரோஹன் - ஜீவன் ஜோடி பெற்றுள்ளது.

வெற்றி குறித்துப் பேசிய ரோஹன் போபண்ணா, "இறுதிச்சுற்றில் 4 இந்தியர்கள் விளையாடியது என்பது இந்திய டென்னிஸுக்கு மிகப்பெரிய படிக்கற்கள் ஆகும்.

இதன்மூலம் குறைந்தபட்சம் இரண்டு சிறுவர்கள் டென்னிஸ் விளையாடத் தொடங்கினால்கூட, அதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்' என்றார்.