இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தோல்விக்கு காரணம். அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

எனவே இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் எதிர்பார்த்தபடியே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் இரண்டு போட்டிகளிலும் விராட் கோலி, அஷ்வினை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சரியாக ஆடவில்லை. எனினும் பேட்டிங் வரிசையை பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதேபோல காயத்திலிருந்து குணமடைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஆடிய குல்தீப் இந்த போட்டியில் இல்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ரிஷப் பண்ட்டிற்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. அவர் சிறந்த மற்றும் துடிப்பான வீரர் என்பதால் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது. 

நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.