இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சரியாக ஆடவில்லை. அதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டு புஜாரா சேர்க்கப்பட்டார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவமில்லாத குல்தீப் யாதவின் பவுலிங், லார்ட்ஸில் எடுபடவில்லை. மேலும் வெளிநாடுகளில் தொடர்ந்து பேட்டிங்கில் சோபிக்கமுடியாமல் சொதப்பிவரும் முரளி விஜய், இந்த தொடரிலும் சொதப்பினார். முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிலும் அந்த 26 ரன்களும் முதல் போட்டியில் எடுக்கப்பட்ட ரன்கள். லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே டக் அவுட்டானார்.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக தவான், குல்தீப்பிற்கு பதிலாக பும்ரா, தினேஷ் கார்த்திற்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். மூவருமே தங்களை அணியில் சேர்த்ததற்கு அர்த்தம் சேர்த்தனர். 

இந்நிலையில், எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 18 பேர் கொண்ட அணியிலிருந்தே முரளி விஜயும் குல்தீப் யாதவும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

19 வயதே ஆன இளம் வீரர் பிரித்வி ஷா, 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் நடந்த இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில், இந்திய ஏ அணியில் ஆடிய பிரித்வி ஷா சிறப்பாக ஆடினார். இதுவரை 14 முதல் தர போட்டிகளில் ஆடி 1418 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 56.72.

இவரைப்போலவே ஹனுமா விஹாரியும் இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடினார். இவர் 2012ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆடியவர். ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். இதுவரை 63 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள ஹனுமா விஹாரி, 5142 ரன்களை குவித்துள்ளார். முதல் தர போட்டிகளில்  15 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக டிஃபென்ஸ் ஆடக்கூடியவர். 

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜயும் குல்தீப்பும் நீக்கப்பட்டு பிரித்வியும் விஹாரியும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

4 மற்றும் 5வது டெஸ்ட் போட்டிகளுக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர், ஹனுமா விஹாரி.