சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்தியாவுடன் தோற்றால் பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறி விடுமா? அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

பாகிஸ்தானின் இக்கட்டான நிலை 

8 நாடுகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குருப் ஏ பிரிவில் 2 போட்டிகளும், குருப் பி பிரிவில் ஒரு போட்டியும் முடிந்து விட்டன. சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் வங்கதேசத்தை பந்தாடி விட்டு தெம்புடன் உள்ளது. 

இந்த இரண்டு அணிகளும் நாளை மோத இருக்கும் நிலையில், இது பாகிஸ்தானுக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாகும். இதில் தோற்றால் அந்த அணி மூட்டையை கட்டி விட வேண்டியது தான். சாம்பியன்ஸ் டிராபியஒ பொறுத்தவரை தவறுகளுக்கு கொஞ்சம் கூட இடமில்லை. ஒரு தோல்வி கூட அணியை வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும். அந்த நிலையில் தான் பாகிஸ்தான் இப்போது மாட்டிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இருக்கும் வாய்ப்புகள் 

குரூப் ஏ பிரிவை பார்த்தால் நியூசிலாந்து தற்போது இரண்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டு புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணியின் ரன் ரேட் +1.200 என்று சிறந்த நிலையில் உள்ளது. இந்தியாவின் ரன் ரேட் +0.408 ஆக உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றல் இந்தியாவுடன் தோல்வி அடைந்த வங்கதேசம் பாகிஸ்தானை விட நெட் ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது.

அதாவது வங்கதேச அணியின் ரன் ரேட் -0.408 ஆக உள்ளது. அதே வேளையில் பாகிஸ்தானின் ரன் ரேட் -1.200 என்று இதை விட படுமோசமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. நாளை இந்தியாவிடன் ஒரு போட்டி மற்றும் பிப்ரவரி 27ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டி. இதில் இந்திய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து, பிப்ரவரி 24 அன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து வங்கதேசத்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் தொடரில் இருந்து வெளியேறி விடும்.

வங்கதேசம்-நியூசிலாந்து போட்டி

அதே வேளையில் பாகிஸ்தான் நாளை இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணி தொடரில் நீடிக்க வாய்ப்பு கிடைக்கும். இப்படி நடந்தால் இந்தியா-நியூலாந்து இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விடும். அதே நேரத்தில் இந்தியாவுடன் தோல்வி அடைந்தாலும் பாகிஸ்தானுக்கு அரையுறுதி வாய்ப்பு கொஞ்சம் ஒட்டிக்கொண்டுள்ளது.

அப்போது இந்தியா மற்றும் வங்கதேசத்தின் உதவி பாகிஸ்தானுக்கு தேவைப்படும். அதாவது இந்திய அணியும், வங்கதேசமும் நியூசிலாந்தை வீழ்த்தினால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். இந்தியா நியூசிலாந்தை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் வங்கதேசம் நியூசிலாந்தை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வங்கதேசம் இந்தியாக்கே ஓரளவு போட்டியளித்து தான் தோல்வியை தழுவியது. 

என்ன நடக்கும்?

கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்தியாவுடன் தோல்வி அடைந்தால் பாகிஸ்தானின் பார்வை முழுவதும் வங்கதேசம் நியூசிலாந்து போட்டியில் தான் இருக்கும். ஒருவேளை இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் தங்களது ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.