சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்கா 4வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிவடையும் முன்பே ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் சென்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி (Champions Trophy)

Champions Trophy 2025: பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குருப் ஏ பிரிவை பொறுத்தவரை இந்தியாவும், நியூசிலாந்தும் ஏற்கெனவே அரையுறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், வங்கதேசம் போட்டியில் இருந்து வெளியேறின.

குருப் பி பிரிவில் இங்கிலாந்து ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையெ அரையிறுதிக்கு செல்ல கடும் போட்டி நிலவியது. நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி (South Africa enters semi-final)

ஏற்கெனவே 3 புள்ளிகள் பெற்றிருந்த ஆஸ்திரேலியா இந்த போட்டியுடன் வழங்கப்பட்ட 1 புள்ளியுடன் சேர்த்து மொத்தம் 4 புள்ளிகள் பெற்று 3வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதே வேளையில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கான ரேஸில் இருந்தன. இன்று தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மோதும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இல்லையென்றால் சுமாராக தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்குள் சென்று விடும் நிலை இருந்தது.

அதே வேளையில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் தகுதிபெறும் வாய்ப்பு இருந்தது. அதன்படி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்குள் தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி (Indian Team)

ரன்ரேட் அடிப்படையில், தென்னாப்பிரிக்கா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினால் தான் தொடரில் இருந்து வெளியேறும். ஆனால் இங்கிலாந்து அடித்த ஸ்கோரே 200க்குள் என்பதால் 2வது பேட்டிங் செய்யும் முன்பே தென்னாப்பிரிக்கா 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. ஆனால் அரையிறுதியில் எந்த அணி யாருடன் மோதுகிறது என்பதை அறிய நாளை வரை காத்திருக்க வேண்டும்.

அரையிறுதியை பொறுத்தவரை குருப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், குருப் பி பிரிவில் இர்ண்டாம் பிடிக்கும் அணியும் மோதும். இதேபோல் குருப் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், குருப் ஏ பிரிவில் இர்ண்டாம் பிடிக்கும் அணியும் மோதும். உதாரணத்துக்கு நாளை நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தால், குரூப் Bயில் 2வது இடத்தை பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் மோதும்.