சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், இரு அணிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ளது தான். பெரிய தொடர்களில் இரு அணிகளும் மோதினால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று புத்துணர்ச்சியுடன் நாளை களமிறங்குகிறது. அதே வேளையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இந்தியாவுடன் வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது. இரண்டு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய அணியின் பலம் என்னென்ன? 

வலுவான பேட்டிங் வரிசை

இந்திய அணியின் பலமே அதன் வலுவான பேட்டிங் வரிசை தான். ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என வலுவான பேட்டிங் வரிசையை இந்தியா கொண்டுள்ளது. ஒருவர் சொதப்பினாலும் மற்றவர் கைகொடுத்து அணியை தூக்கி நிறுத்தி விடலாம்.

ஆல்ரவுண்டர்கள் எனும் மேட்ச் வின்னர்கள் 

சாம்பியன்ஸ் டிராபியில் மற்ற அணிகளை விட இந்தியா தான் அதிக ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா என ஆல்ரவுண்டர்கள் நிறைந்துள்ளனர். இவர்களால் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங் மூலமும் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக கொண்டு வர முடியும்.

அனுபவ வீரர்கள்

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, முகமது ஷமி என அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் தங்கள் அனுபவத்தின்மூலம் போட்டியின் எந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் விளையாட முடியும். 

மாயாஜால ஸ்பின்னர்கள் 

இந்திய அணிக்கு மிக முக்கியமானதொரு பலம் மாயாஜால ஸ்பின்னர்கள் தான். அணியில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் என அனைத்து வகையான ஸ்பின்னர்களும் இருக்கின்றனர். துபாய் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் இவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. 

இந்திய அணியின் பலவீனம் என்னென்ன? 

இடது கை பாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக தடுமாற்றம் 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சரி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சரி இடது கை பாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த காலங்களில் மிட்ச்செல் ஸ்டார்க், டிரென்ட் போல்ட், ஷாகீன் அப்ரிடி போன்ற இடது கை பாஸ்ட் பவுலர்கள் நமது பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்துள்ளனர். பாகிஸ்தானில் இடது கை பாஸ்ட் பவுலர் ஷாகீன் அப்ரிடி இருப்பது இந்தியாவுக்கு தலைவலியாக இருக்கும்.

சொதப்பலான பீல்டிங் 

சமீபகாலமாக இந்திய அணி பீல்டிங் சொதப்பி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் எளிதான கேட்ச்களை கோட்டை விடடனர். சில பவுண்டரிகளையும் எளிதாக விட்டுக்கொடுத்தனர். ஆகவே பீல்டிங் துறையில் இந்தியா முன்னேற வேண்டியது அவசியமாகும்.

பாகிஸ்தான் அணியின் பலம் என்னென்ன? 

தெறிக்க விடும் பாஸ்ட் பவுலர்கள்

யானைக்கு பலம் தும்பிக்கையில் இருப்பதுபோல் பாகிஸ்தானின் பெரும் பலம் பாஸ்ட் பவுலர்கள் தான். அந்த அணியில் ஷாகீன் அப்ரிடி, நஷீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப் என வேகத்தில் மிரட்டக்கூடிய பவுலர்கள் உள்ளனர். இவர்கள் ஒருசேர அசத்தி விட்டால் இந்தியா வெற்றியை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தகக்து. 

முகமது ரிஸ்வான், பாபர் அசாம் 

பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் ஸ்டார் வீரர் பாபர் அசாம் தான் அந்த அணியின் பெரும் பலம். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடிய போட்டிகளில் எல்லாம் பாகிஸ்தான் வெற்றிவாகை சூடியுள்ளது. 2022ம் ஆண்டு உலககோப்பையில் இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடி தங்கள் அணியை வெற்றி பெற வைத்தது நினைவிருக்கலாம். 

பாகிஸ்தான் அணியின் பலவீனம் என்னென்ன? 

படுமோசமான பீல்டிங் 

ஒரு சின்ன குழந்தையை கூப்பிட்டு கேட்டால் கூட பாகிஸ்தானின் மிகப்பெரும் பலவீனம் படுமோசமான பீல்டிங் என்று சொல்லும் அளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் கேட்களை கோட்டை விடுவதில் வலல்வர்கள். களத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக செயல்படும் சில பாகிஸ்தான் வீரர்கள் கைக்கு வரும் கேட்ச்களை விடுவதை வழக்கமாக வைத்துள்ளனார். சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களில் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டால் கோப்பையை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

ஒற்றுமை இல்லை 

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை எப்போதும் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் போன்ற அனுபவ மூத்த வீரர்களை நம்பியே இருக்கிறது. சமீபத்திய காலங்களில் சில இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அது தொடர்ந்து பார்மில் இருப்பதில்லை. பெரிய தொடர்களில் தனிப்பட்ட வீரர்களை நம்பியிருக்காமல் வீரர்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால்தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும்.

அழுத்தத்தை சமாளிக்கும் தன்மை இல்லை

பெரும்பாலான போட்டிகளில் அழுத்தத்தை தாங்க முடியாமல் பாகிஸ்தான் அணி ஒரேடியாக சரிந்து விடுகிறது. உதாரணத்துக்கு 50/5 என்ற இக்கட்டான நிலையிலும், 5 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையிலும் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணியினர் தடுமாறி விடுகின்றனர். அந்த நேரத்தில் அணிக்கு கைகொடுத்து தூக்கி விடும் மேட்ச் வின்னர்கள் இல்லாதது மிகப்பெரும் பலவீனமாகும்.