அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய இழப்புகளை சந்தித்திருக்கிறது. வரும் உலக கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். 

இதுவரை அதிக முறை உலக கோப்பையை வென்றுள்ள அணி ஆஸ்திரேலிய அணி தான். இதுவரை 5 முறை உலக கோப்பையை வென்று பட்டத்தை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனும் ஆஸ்திரேலியா தான். 1999, 2003, 2007 என தொடர்ச்சியாக மூன்று உலக கோப்பைகளை வென்று அசத்தியது.

கடந்த 2015ம் ஆண்டு உலக கோப்பையையும் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தான் வென்றது. இந்நிலையில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஐடியா கொடுத்த துணை கேப்டன் வார்னர், ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்மித் ஆகியோர் அவரவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமெனும், அடுத்த போட்டியுடன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகள், அதற்காக தயாராகும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. குறைந்தபட்சம், ஓராண்டுக்கு முன்பாவது உலக கோப்பைக்காக அணியை தயார் செய்யும் பணிகளை தொடங்க வேண்டும்.

இந்நிலையில், உலக கோப்பை நெருங்கிவிட்ட சூழலில், கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர் என அனைவருமே மாறுவது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஸ்மித்திற்கு, இந்த சம்பவம் மிகப்பெரிய பின்னடைவு. அவருக்கு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கே இது பின்னடைவுதான். புதிய கேப்டனை நியமித்து, அவரது தலைமையில் ஓராண்டுக்குள்ளாக சிறப்பான அணியாக உருவெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஸ்மித் மற்றும் வார்னருக்கு பதிலாக இரண்டு வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடினால், உலக கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு இடம் கிடைக்குமா? அப்படியே அவர்கள் சேர்க்கப்பட்டாலும் ஓராண்டாக விளையாடிவந்த அணியின் பேட்டிங் வரிசையை மாற்றவேண்டும். அதுவும் அணிக்கு பங்கமாக அமையும்.

பயிற்சியாளர் மாறுவதும் பெரும் பின்னடைவுதான். இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்வதே ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய சவால். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கெட்ட பெயர், அணியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை எல்லாம் மீறி அணியை வலுவாக கட்டமைத்து சிறப்பாக விளையாடுவது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

இத்தனை சவால்களையும் தகர்த்து மீண்டெழுமா நடப்பு சாம்பியன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.