ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்று வரை அணியை கூட்டிச் செல்வதே கேப்டனாக எனது முதல் இலக்காகும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக கெளதம் கம்பீர் இருந்தார். அவரது தலைமையில் அந்த அணி இரண்டு முறை சாம்பியன் ஆகியிருந்தது. 

இந்த நிலையில், இந்த சீசனில் கம்பீரை கைவிட்ட கொல்கத்தா, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்கி உள்ளது. 

அணியின் புதிய ஜெர்ஸி அறிமுக நிகழ்ச்சி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக், "ஓர் அணியின் கேப்டனிடம், அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். 

கேப்டனாக இருப்பதில் நெருக்கடி இருக்கும்தான். எனினும், பிளே ஆஃப் சுற்று வரை அணியை கூட்டிச் செல்வதே கேப்டனாக எனது முதல் இலக்காகும். அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதன் மூலமாக, அந்த இலக்கை அடைய இயலும் என எண்ணுகிறேன். 

இந்திய அணிக்கு ஆடியதைப் போலவே, கொல்கத்தா அணியிலும் எந்த பேட்டிங் வரிசையிலும் என்னால் களம் காண இயலும். ஐபிஎல் போட்டி, இக்கட்டான சூழ்நிலைகளை கையாளுவதை அடிப்படையாகக் கொண்டது. 

எல்லோரைப் போலவே நானும் என்னால் இயன்றதை சிறப்பாகச் செய்ய உள்ளேன்" என்று கூறினார்.