ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, ஷான் மார்ஷை அவுட்டாக்கிய அந்த பந்து, மார்ஷை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சில நொடிகள் கிரீஸிலேயே வியந்து நின்றார். 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாராவின் சதம், மயன்க், கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவரின் பொறுப்பான அரைசதத்தால் 443 ரன்களை குவித்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிய 6 ஓவர்கள் இருந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை எடுத்திருந்தது. அத்துடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியை தனது வேகத்தில் திக்கு முக்காட வைத்து சரித்தார் பும்ரா. மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவின் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்த 6 விக்கெட்டுகளில் ஷான் மார்ஷை பும்ரா வீழ்த்திய பந்து அனைவரையுமே மிரள வைத்தது. ஷான் மார்ஷ் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில நொடிகள் ஆனது. உணவு இடைவேளைக்கு முன்னதாக வீசிய ஓவரில் மார்ஷை வீழ்த்தினார் பும்ரா. ஷான் மார்ஷ் சற்றும் எதிர்பாராத வகையில், எதிர்பாராத நேரத்தில் துல்லியமாக ஸ்லோ யார்க்கரை வீசினார் பும்ரா. அந்த பந்தை கணித்து  ஆடமுடியாமல் எல்பிடபிள்யூ ஆனார் ஷான் மார்ஷ். அவுட்டான சில நொடிகள், அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் அதிருப்தியுடன் வெளியேறினார்.