ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸின் மண்டையை பதம் பார்த்த பும்ரா, இந்த போட்டியிலும் மார்கஸின் மண்டையை பதம் பார்த்ததோடு, தனது வேகத்தில் ஹெல்மெட்டை விரிசல் விட வைத்தார். 

இந்திய அணி முன்னெப்போதையும் விட மிரட்டலான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. பும்ரா, ஷமி, இஷாந்த், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பும்ராவின் வேகம் மிரட்டலாக உள்ளது. எதிரணியினரை அச்சுறுத்தும் அளவுக்கு மிரட்டலாக வீசுகிறார் பும்ரா. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த இரண்டாவது போட்டியில் பந்து தாறுமாறாக எகிறியது. பும்ரா மற்றும் ஷமியின் பவுன்ஸர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் மண்டையையும் கைகளையும் பதம்பார்த்தன. ஷமியின் வேகத்தில் ஃபின்ச் கையில் காயமடைந்தார். அதேபோல பும்ராவின் அதிவேக பவுன்ஸர், மார்கஸ் ஹாரிஸின் மண்டையை பதம் பார்த்தது. அந்த பவுன்ஸரில் மண்டையில் அடி வாங்கிய மார்கஸ் ஹாரிஸ், நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஹெல்மெட்டோ விரிசல் விட்டது. 

அதேபோல மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸை மீண்டும் மிரட்டியுள்ளார் பும்ரா. இந்திய அணி 443 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த நிலையில், இன்றைய ஆட்டம் முடிய 7 ஓவர்கள் இருக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

ஃபின்ச்சும் மார்கஸ் ஹாரிஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அப்போது பும்ரா வீசிய 4வது ஓவரின் 2வது பந்து நல்ல வேகத்தில் பவுன்ஸ் ஆனது. அந்த பந்தை விடுவதற்காக மார்கஸ் ஹாரிஸ் குனிந்தார். எனினும் பந்து அவர் எதிர்பார்த்த அளவைவிட குறைவாக எழும்பியதால் அவரது தலையில் அடித்தது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஹெல்மெட் விரிசல் விட்டது. இதனால் சிறிது நேரம் வீணானதால் ஒரு ஓவர் குறைவாக வீசப்பட்டது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது.