Britain Andy Murray quit from Australian Open

நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் உலகின் முன்னாள் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே.

இடுப்புப் பகுதி காயம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை முதல் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார் ஆன்டி முர்ரே.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து ஏடிபி போட்டிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக, விம்பிள்டன் காலிறுதிச் சுற்றின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்டி முர்ரே, "காயத்தில் இருந்து முழுமையாக மீளாததை அடுத்து, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் என்னால் பங்கேற்க இயலவில்லை. விரைவில் பிரிட்டன் சென்று காயத்துக்கு மேற்கொண்டு சிகிச்சை பெற இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முர்ரேவும், அமெரிக்காவின் ரையான் ஹாரிசனும் மோதுவதாக இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, ஆசிய அளவில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பயிற்சியின்போது வலது கை மணிக்கட்டுப் பகுதியில் நிஷிகோரிக்கு காயம் ஏற்பட்டது.