Brisbane International Tennis Milos Raionich and Miska Swarov lost and lost the match ...

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த உலகின் 24-ஆம் நிலை வீரரான ரயோனிச்சை, உலகின் 208-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதி அதில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போட்டிகளில் பங்கேற்காத ரயோனிச், பிரிஸ்பேன் போட்டியிலிருந்து இந்த சீசனை தொடங்கினார். எனினும், மினாருக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாகப் போராடி அவர் வீழ்ந்தார்.

முதல் செட்டில் ஒரு முறையும், 2-ஆவது செட்டில் இரு முறையும் ரயோனிச்சின் சர்வ்களை பிரேக் செய்தார் மினார். இறுதியில் அவரே வெற்றப் பெற்று அசத்தினார்.

இதேபோல, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த உலகின் 33-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவை 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் உலகின் 175-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் மைக்கெல் மோஹ்.

இதனிடையே, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், சகநாட்டவரான மேத்யூ எப்டனை 6-7(3/7), 7-6(7/5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர், உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொள்கிறார்.

பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.