Brisbane International Tennis Dimitrov Edmund with the end of the quarter

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், பிரிட்டனின் கைல் எட்மன்ட், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின், அமெரிக்கரான ரையான் ஹாரிசன், ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உலகின் 3-ஆம் நிலை வீரரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 7-6(10-8), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை வீழ்த்தினார்.

இதையடுத்து காலிறுதியில் அவர் பிரிட்டனின் கைல் எட்மண்டை எதிர்கொள்கிறார்.

உலகின் 50-ஆம் நிலை வீரரான கைல் எட்மண்ட் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் கொரியாவின் சுங் ஹியூனை 7-6(3), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதேபோல் மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின் 7-6(5), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேர்ட் டொனால்ட்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர் மற்றொரு அமெரிக்கரான ரையான் ஹாரிசனை எதிர்கொள்கிறார்.

முன்னதாக ஹாரிசன் 6(5)-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹன்ஃப்மானை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வீழ்த்தியிருந்தார்.