இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது தவறான முடிவு என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. புனேவில் நடந்த மூன்றாவது போட்டியில் மட்டும்தான் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டி டிரா ஆனது. எஞ்சிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் 323 ரன்கள் என்ற இலக்கை 43வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 105 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15 ஓவரில் எட்டி அபார வெற்றி பெற்றது. 

இந்த மூன்று போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி அடைந்தது. முதல் நான்கு போட்டிகளிலும் டாஸ் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், கடைசி போட்டியில்தான் டாஸ் ஜெயித்தார். ஆனால் அதிலும் தவறான முடிவெடுத்துவிட்டார். டாஸ் வென்ற ஹோல்டர், பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் கோலியுமே டாஸ் வென்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸைத்தான் பேட்டிங் செய்ய பணித்திருப்பேன் என்று கூறியிருந்தார். அந்த ஆடுகளத்தின் தன்மைக்கு இரண்டாவது பேட்டிங் ஆடுவதுதான் சரியாக இருந்திருக்கும் என்று முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா, அந்த ஆடுகளம் வறண்டு இருந்தது. எனவே முதலில் இந்தியாவை பேட்டிங் ஆட வைத்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசுவதுதான் சரியான முடிவாக இருந்திருக்கும். இந்திய அணியின் ஸ்பின்னர்களை அந்த ஆடுகளத்தில் தாமதமாக பந்துவீச வைத்திருப்பதன் மூலம் அவர்களின் ஸ்பின்னை நன்றாக ஆடியிருக்க முடியும். எனவே கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடியது மிகப்பெரிய தவறு என்று பிரயன் லாரா விமர்சித்துள்ளார்.