ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. தோனி தலைமையில் மீண்டும் சென்னை அணி களம் காண்பதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முதல் போட்டியிலேயே வலுவான இரு அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும் முதல் போட்டியில் மோதுகின்றன.

இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான பிராவோ, இந்த ஐபிஎல் தொடர்பாக சென்னை அணியின் இணையதளத்தில் பேசியுள்ளார். அதில், எங்கள் ரசிகர்களுக்காக நான் வித்தியாசமாக எதையும் செய்வேன். இம்முறையும் என் நடனத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய அணிகள் சென்னை சூபப்ர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இரண்டுமே வெற்றிகரமான அணிகள். அனைவரும் இந்தப் போட்டியை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். தொடரின் முதல் போட்டி என்ற விதத்தில் இதைவிட மிகப்பெரிய போட்டி ஒன்று இருக்க முடியாது.

தோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அனைத்தும் தயாரிப்பில் தான் உள்ளது. வலைப்பயிற்சிகளில் தோனிக்கு நான் எப்பவுமே கடைசி ஓவர்களை வீசுவதைப் போல் வீசுவேன். அதற்குக் காரணம், அவர் உலகின் தலைசிறந்த பினிஷர்களில் ஒருவர். அவருக்கு வீசுவது மூலம் என்னை நானே சவாலுக்கு உட்படுத்தி கொள்வேன்.

எப்போதுமே ஒரு கற்பனையான சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு பயிற்சி செய்வோம். நான் பவுலிங் செய்வேன்; இதில் சில சமயம் அவர் வெல்வார், சில சமயம் நான் வெல்வேன்.

தோனி ஒரு மிகச்சிறந்த தலைவர். வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த எப்போதுமே அனுமதிப்பார். செய்யும் தவறுகளிலிருந்து மீண்டெழ வாய்ப்பளிப்பார். அவரது அமைதியான குணம் எப்போதுமே நல்லதுதான் என பிராவோ தெரிவித்துள்ளார்.