இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான எஞ்சிய 3 ஒருநாள் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆடிவரும் அவர்கள், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில், டெஸ்ட் தொடர் மற்றும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. 

அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். இவர்கள் இரண்டு போட்டிகளிலுமே பெரியளவில் சோபிக்கவில்லை. இவர்களின் ஓவர்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து நொறுக்கிவிட்டனர். இரண்டாவது போட்டியின் கடைசி ஓவர்களில் ஷமியாவது பந்துகளை மாறி மாறி வீசி பேட்ஸ்மேன்களை குழப்பினார். உமேஷ் யாதவ் அப்போதும் ரன்களை வாரிவழங்கினார். 

அதனால் முதல் இரண்டு போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தது. அதனால் எஞ்சிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில், எஞ்சிய மூன்று போட்டிகளிலிருந்து ஷமி நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

முதல் போட்டியில் ஷமி அதிக ரன்களை வாரி வழங்கியதால், அவர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இரண்டாவது போட்டியில் உமேஷை விட ஷமி நன்றாகவே வீசினார். எனினும் உமேஷ் யாதவ் அணியில் உள்ளார். இந்த மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் நிகழவில்லை. மற்ற வீரர்கள் அப்படியே உள்ளனர். 

கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது, கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே.