புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியின் 56-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 41-38 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது.

புரோ கபடி லீக் சீசன் - 5 போட்டியின் 56-வது ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அபாரமாக ஆடியது பாட்னா அணி. தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாட்னா, முதல் பாதி முடியும்வரை முன்னிலையில் இருந்தது. 4-7 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் அணி பின் தங்கியது.

நடுவில் ஒருமுறை 7-7 என்ற சமநிலையை அடைந்தாலும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பாட்னா 18-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பெங்கால் அணியை ஆல் அவுட்டாக்கிய பாட்னா, 34-25 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பிறகு பெங்கால் கேப்டன் குன் லீயும், அந்த அணியின் ரைடர் மணீந்தர் சிங்கும் அசத்தலாக ஆட பாட்னா அணி ஆட்டம் கண்டது.

கடைசி 4 நிமிடங்களில் அபாரமாக ஆடிய பெங்கால் அணி, பாட்னாவை ஆல் அவுட்டாக்கியது. பின்னர் ஸ்கோரையும் 38-38 சமன் செய்த பெங்கால் அணி அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி 41-38 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

சொந்த மண்ணில் விளையாடிய முதல் ஆட்டத்தில், ஆரம்பத்தில் தடுமாறிய பெங்கால் அணி, கடைசி கட்டத்தில் அபாரமாக ஆடி அசத்தல் வெற்றி கண்டது.

அதே நேரத்தில், ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பாட்னா அணி கடைசியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தியதன் மூலம், 5-வது வெற்றியை பதிவு செய்துள்ள பெங்கால் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றது.

பெங்கால் – பாட்னா இடையேயான இந்த ஆட்டத்தைக் காண கடும் மழைக்கு மத்தியிலும் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர் என்பது கொசுறு தகவல்.