இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் டெல்லியில் 15-ந் தேதி நடக்கிறது. இதில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

லோதா கமிட்டி சிபாரிசுகள்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி பல்வேறு சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியதால் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு பி.சி.சி.ஐ. ஆளானது.

லோதா கமிட்டியின் பரிந்துரைகள் பலவற்றை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாததால் தங்களால் இதனை அமல்படுத்த முடியாது என்று கடந்த 7-ந் தேதி நடந்த விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இடைக்கால உத்தரவு

இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், ‘லோதா கமிட்டி சிபாரிசுகளை நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் வாரியமும், மாநில கிரிக்கெட் சங்கங்களும் பிரமாணப்பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி எதுவும் பட்டுவாடா செய்யக்கூடாது. மேலும் ஏற்கனவே நிதியை பெற்ற மாநில கிரிக்கெட் சங்கங்கள் அதனை செலவிடக்கூடாது. அந்த பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வைத்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

அவசர பொதுக்குழு கூடுகிறது

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவு குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2-வது முறையாக அரங்கேற இருக்கிறது. ஏற்கனவே கடந்த 1-ந் தேதி நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் லோதா கமிட்டியின் சில முடிவுகளை மட்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

லோதா கமிட்டி சிபாரிசு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வருகிற 17-ந் தேதி தனது இறுதி தீர்ப்பு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர பொதுக்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred