இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கேப்டன் விராட் கோலி, தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வீரர்களின் ஊதிய உயர்வுக்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டது.

அதன்படி, வீரர்களை தரம்பிரித்து அவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சீனியாரிட்டி மற்றும் திறமையின் அடிப்படையில் ஏ, பி, சி என வீரர்கள் தரம் பிரிக்கப்படுவர். அதனடிப்படையில் வீரர்களுக்கான ஊதிய உயர்வு விகிதமும் ஊதியமும் அமையும்.

வீரர்களை தரம்பிரிக்கும் பணியை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மேற்கொள்வார். இந்த புதிய ஒப்பந்த பட்டியலில் ஏ கிரேடிலிருந்து தோனி, பி கிரேடுக்கு கொண்டு செல்லப்படுவார் என கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதால், அவர் “ஏ” கிரேடிலிருந்து “பி” கிரேடுக்கு தரம் குறைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் தரம் குறைக்கப்படுவது தொடர்பான விவாதத்தால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அணியின் சீனியர் வீரரும், மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கும் உரியவரான தோனியின் தரம் குறைக்கப்படுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.