BCCI Leader - Equilibrium between Sri Lanka

பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் இடையேயான இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்தது.

பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இறுதி நாளான நேற்று பேட் செய்த பிசிசிஐ தலைவர் லெவன் அணி 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்கள் எடுத்தது.

இரு அணிகளுக்கு இடையேயான இந்த பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பிசிசிஐ தலைவர் அணி பந்துவீச தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணியில் சமரவிக்ரமா அதிகபட்சமாக 74 ஓட்டங்கள் எடுத்தார். கருணாரத்னே 50 ஓட்டங்கள், மேத்யூஸ் 54 ஓட்டங்களுக்கு ரிடையர்ட் ஹர்ட் ஆகி விலகினர்.

திரிமானி 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சண்டிமல் 29 ஓட்டங்களில் ரிடையர்ட் ஹர்ட் ஆனார். சனகா 2 ஓட்டங்கள், தனஞ்ஜயா 10 ஓட்டங்கள், ஹெராத் 3 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வர 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது இலங்கை.

நிரோஷன் டிக்வெல்லா 73 ஓட்டங்கள், ரோஷன் சில்வா 36 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 2-வது நாளான நேற்று 411 ஓட்டங்களுடன் டிக்ளேர் செய்வதாக இலங்கை அறிவித்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பிசிசிஐ அணியில் தொடக்க வீரர் தன்மய் அகர்வால் 16 ஓட்டங்கள், உடன் வந்த ஜீவன்ஜோத் சிங் 35 ஓட்டங்களில் வீழ்ந்தனர். இருவருமே தலா 3 பவுண்டரிகள் அடித்தனர். அடுத்து வந்த பந்தாரி 3 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

அதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதம் கடந்து 128 ஓட்டங்கள் விளாசினார். எனினும், சமர விக்ரமா பந்தில் டிக்வெல்லாவிடம் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவ்வாறாக 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு பிசிசிஐ தலைவர் லெவன் அணி 287 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டநேரம் முடிவுக்கு வர, போட்டி சமன் ஆனது.

பிசிசிஐ அணி தரப்பில் சந்தீப் 33 ஓட்டங்கள், சக்ஸனா 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இலங்கை தரப்பில் திரிமானி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.