பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயத்தால் பாதியில் களத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ டுவிட்டரில் விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயத்தால் பாதியில் களத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ டுவிட்டரில் விளக்கமளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 14வது ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங்கிற்கு எதிராக கடுமையாக போராடி வென்ற இந்திய அணி, பாகிஸ்தானை எளிமையாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடவேண்டும் என்பதற்காக ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் களமிறக்கப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் தொடக்க ஓவர்களை அருமையாக வீசி, பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் இரண்டு விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் முதல் 5 ஓவர்களிலேயே வீழ்த்திவிட்டதால் நெருக்கடி அதிகமானது. ஆனாலும் ஷோயப் மாலிக்கும் பாபர் அசாமும் இணைந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் கடுமையாக முயற்சித்தனர்.
அப்போது 18வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, தடுமாறி கீழே விழுந்த பாண்டியா, ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்லப்பட்டார். ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டதால் பெரிய காயம் என்பது உறுதியானது. அதனால் ரசிகர்கள் பதற்றமடைந்தனர். பாண்டியாவிற்கு என்ன ஆனது? எப்படி இருக்கிறார்? என்ற பல கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், பாண்டியாவிற்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவரால் எழுந்து நிற்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் பாண்டியா இருந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.
