பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். தன்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்து எழுதியுள்ள கட்டுரையை பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மீ டு என்ற இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் சினிமா உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். இனிமேல் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் எந்த துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சினிமா பிரபலங்கள் மற்றும் பிரபலமல்லாத மற்ற பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை துணிச்சலுடன் பதிவிட்டுவருகின்றனர். 

நானே படேகர் மீது தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். பெண் பத்திரிகையாளர் ஒருவர் கவிஞர் வைரமுத்து தன்னிடம் அத்துமீறியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக வைரமுத்துவிற்கு எதிராக சின்மயி டுவீட் செய்திருந்தார். சின்மயியின் கருத்தை நடிகை சமந்தா ஆமோதித்துள்ளார்.

இவ்வாறு சினிமா துறை மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மீது இந்தியாவை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 

ஆட்டோகிராப் வாங்க சென்ற தன்னிடம் ரணதுங்கா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதேபோல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீதும் இளம்பெண் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

இவ்வாறு கிரிக்கெட் வீரர்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துவரும் நிலையில், பிசிசிஐ-யின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னிடம் அவர் அநாகரிகமாக நடந்துகொண்ட விதத்தை அந்த பெண் அம்பலப்படுத்தியுள்ளார். தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் எழுதியுள்ள கட்டுரையை அந்த பெண்ணின் பெயரை வெளியிடாமல் பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ராகுல் ஜோஹ்ரி கடந்த 2016ம் ஆண்டிலிருந்து பிசிசிஐ-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவருகிறார்.