bangladesh women team defeated india and won asia cup

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டியில், 6 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஒருவாரமாக ஆசிய கோப்பை தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இந்திய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மிதாலி ராஜ், 11 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் 56 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் சோபிக்காததால், இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியிலும் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. சுல்தானா 16, ஆய்ஷா ரஹ்மான் 17, ஃபர்கானா 11, நிகர் சுல்தானா 27, ருமானா அகமது 23 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வீசிய கடைசி ஓவரின் முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து ஆசிய கோப்பையை 6 முறை வென்ற இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக வங்கதேச அணி கோப்பையை வென்றது.