bagaladesh defeat india in first time

மகளிருக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது ஆட்டத்தில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

மகளிருக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது ஆட்டம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில், முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய வங்கதேசம் 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியாவில் தொடக்க வீராங்கனை மிதாலி ராஜ் 15 ஓட்டங்களில் ரன் ஔட் செய்யப்பட்டார். உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 2 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் வந்த பூஜா வஸ்த்ரகர் 20 ஓட்டங்கள் சேர்க்க, அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 42 ஓட்டங்கள் விளாசினார்.

அதனைத் தொடர்ந்து வந்தவர்களில் தீப்தி சர்மா 5 பவுண்டரிகள் உள்பட 32 ஓட்டங்கள் எடுத்தது, ருமானா அகமது பந்துவீச்சில் போல்டானார். அனுஜா பாட்டீல் 1 ஓட்டம், ஜுலந் கோஸ்வாமி 4 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர். 

20 ஓவர்கள் முடிவில் மோனா மேஷ்ராம் 14 ஓட்டங்கள், தன்மய் பாட்டியா 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

வங்கதேச தரப்பில் ருமானா அகமது 3, சல்மா காட்டுன் ஒரு விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 142 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய வங்கதேச அணியில் தொடக்க வீராங்கனைகள் சமிமா சுல்தானா 33 ஓட்டங்கள், ஆயிஷா ரஹ்மான் 12 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினர்.

அடுத்து ஃபர்கானா ஹோக் களம் காண, நிகர் சுல்தானா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ருமானா அகமது, ஃபர்கானாவுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினார்.

அதன்படி, ஃபர்கானா 52 ஓட்டங்கள், ருமானா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்திய தரப்பில் பூஜா, ராஜேஷ்வரி, பூனம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

வங்கதேசத்தின் ருமானா ஆட்டநாயகியானார்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டியில் (டெஸ்ட், ஒருநாள், டி20 உள்பட) இந்தியாவுக்கு எதிராக வங்கதேச மகளிரணி பதிவு செய்யும் முதல் வெற்றி இது என்ற பெயரை பெற்றது.