புகழ்பெற்ற விளையாட்டு எழுத்தாளர்கள், விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டு முடியும்போதும், அந்த ஆண்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை அறிவிப்பார்கள். அந்த வகையில் இந்தியாவின் ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை பார்த்தோம்.

தற்போது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் ஜான் பீரிக் அவர்கள் தேர்வு செய்த 2018ம் ஆண்டின் சிறந்த 11 வீரர்களை கொண்ட டெஸ்ட் அணியை பார்ப்போம். ஜான் பீரிக், ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு எழுதிய கட்டுரையில் இந்த அணியை தேர்வு செய்துள்ளார். 

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷாவையும் இலங்கையின் கருணரத்னேவையும் தேர்வு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமான இந்தியாவின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே சதமடித்தார். 3 இன்னிங்ஸ்களில் ஆடி 237 ரன்களை குவித்திருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் பயிற்சி போட்டியில் காயமடைந்ததால் தொடரைவிட்டு வெளியேறினார். பிரித்வி ஷாவையும் இலங்கையின் அருமையான தொடக்க வீரராக திகழும் கருணரத்னேவையும் இந்த ஆண்டின் சிறந்த தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் ஜான். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான இந்திய அணியின் விராட் கோலி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகிய மூவரையுமே தேர்வு செய்துள்ளார். மேலும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆல்ரவுண்டராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ரபாடா, இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவரையும் ஸ்பின் பவுலராக நாதன் லயனையும் தேர்வு செய்துள்ளார். இந்த 11 பேர் கொண்ட அணியில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை தவிர வேறு எந்த ஆஸ்திரேலிய வீரரும் இடம்பெறவில்லை. 

மூன்று கேப்டன்களை ஒருசேர கொண்டுள்ள இந்த அணியின் கேப்டனாக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் ஜான். 

ஜான் பீரிக் தேர்வு செய்துள்ள 2018ம் ஆண்டின் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட் அணி:

பிரித்வி ஷா, கருணரத்னே, கேன் வில்லியம்சன்(துணை கேப்டன்), விராட் கோலி(கேப்டன்), ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், நாதன் லயன், பும்ரா, ஆண்டர்சன், ரபாடா.

12வது வீரராக பாகிஸ்தானின் யாசிர் ஷாவை ஜான் தேர்வு செய்துள்ளார்.